மீளக்காண்பது எப்போ…!! ஆற்றமுடியாத் துயரமதை ஆற்றுவார் யாருளரோ ஆண்டவன் கழலடியில் ஆறுதல் பெற்றனையோ அன்னையாய் அணைத்தே அமுதென சோறாக்கி பண்போடு பா...
மீளக்காண்பது எப்போ…!!
ஆற்றமுடியாத் துயரமதை
ஆற்றுவார் யாருளரோ
ஆண்டவன் கழலடியில்
ஆறுதல் பெற்றனையோ
அன்னையாய் அணைத்தே
அமுதென சோறாக்கி
பண்போடு பாசத்தோடு
பரிமாறிய பொழுதுண்டு
இலைவகை காயென
இனிக்க இனிக்க பேசி
இரங்கியே அணைத்த
எங்கள் மாமியெனுமுறவு
கலகலப்புப் பேச்சு
களங்கமிலா அரவணைப்பு
காலன் கவர்ந்தனையோ
கலங்கியே நிற்கிறோமே
ஒற்றை மகன் வலிதானும்
ஓரக்காதில் கேட்கவில்லை
ஓயாத பேச்சும் ஓய்ந்துபோக
அம்மா என்றுதான் அழைக்க
நீங்கியே போனதெங்கே
மாமியென்றழைக்க மாயம்
தான் கொண்டதெங்கே
ஆன்ம சாந்திக்காய்
சாய் நாதன் பதம் வேண்டி
பரமன் இணையடி என்றும்
மன்றாடி நிற்கின்றோம்…!!
*மாமி என்ற மாணிக்கம் கைநழுவி விட்டதே*
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து மகனைத் தந்ததனால் மாமி என்று உறவாகித் தொலை தூரத்தில் வாழ்ந்தவளே….
உடன் பிறப்புகள் புடைசூழ சொந்த பந்தங்களின் பாசத்தில் கட்டுண்டு கூடி வாழ்ந்து கோடி நன்மைகள் பெற்றவளே…..
பெற்ற பிள்ளைச் செல்வங்கள் வழி வந்த பேரக் குழந்தைகள் தம்மைப் பேணிக் காத்திட்ட பெரும் பொறுப்புக்கு உரியவளே….
அம்புலி போலுந்தன் நெற்றியில் நீயிட்ட குங்குமத் திலகம் வதனமதில் வனப்பூட்டச் சிங்காரமாய் சீரித்து வாழ்ந்த சுமங்கலிப் பெண்ணே….
கொண்டவன் குறைகள் களைந்து அவன் பாடுபயன் யாவும் பக்கத்தில் இருந்தே பார்த்துப் பார்த்து நிறைவேற்றி வந்த பதிவிரதையே…..
ஒரு கணம் தன்னும் சும்மா இருந்திட மனம் ஏவாது எறும்பினைப் போல் சுறுசுறுப்புக் கொண்டு வளவு வாய்க்கால் என்றே….
தன் வாழ்வினை வண்ணமாய் வளப்படுத்தி அங்ஙனம் வாகையும் சூடிய வஞ்சகம் இல்லா நெஞ்சக்காரி….
தனயன் வழி வந்த பேரக் குஞ்சுகள் மூன்றையும் தன் மடியில் போட்டுத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த செவிலித் தாயே…
முகம் காட்ட மறுத்த நிலவாய் நீயும் என்னுடன் பேசாமலே இருந்திருக்கக் கூடாதா என இப்போ எண்ணித் துடிக்கிறேன்…..
காலன் உன்னைக் கவர்ந்தே சென்றிடும் காலம் பார்த்துத் தான் நானும் உன்னுடன் உறவாடி உவகை கொள்ளத் துடித்தேனா….
உன்னுடன் அளவளாவிய அந்த அரிய சில கணங்கள் எனக்குள் ஏதோ இனம்புரியா ஈர்ப்பினைத் தந்து சென்றன….
என்னையும் என் உறவுகளையும் சேமம் விசாரித்துச் செவ்வனே நீ காட்டிய பாசமும் பரிவும் இன்னும் என் செவிகளில் ரீங்காரம் இடுகின்றன….
பொன்னான காலமதை வீணே விழலுக்கு இறைத்த நீராக்கி விட்டோமோ என்றே புலம்பியழத் தோன்றுகிறது…..
என்றும் வெற்றுடலால் மட்டும் மறைந்தும் பசுமை நிறைந்த உம் நினைவுகளால் நெஞ்சம் எங்கும் நிறைந்தும் வாழும் உங்களது ஆத்மா சாந்தி கொள்வதாக…..
*உங்கள் பிரிவால் துயருறும் மருமக்கள், பேரப்பிள்ளைகள்*
